Tuesday 12 January 2016

ஸ்பெக்ட்ர்: தமிழ் “படுத்துதல்”




திரைத்துறையில் ஒரு கதையைச் சொல்வார்கள். 

உதவி இயக்குநர் ஒருவர், தான் எழுதிய கதையைச் சொல்ல, தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோனிடம் நேரம் கேட்டிருந்தார். கிடைத்த நேரத்தில் உதவி இயக்குநர் சொன்ன கதை (அல்லது கதை சொன்ன விதம்) அவருக்கு பிடிக்காமல் போக, அவர் வேறு நல்ல கதையை கொண்டுவரும்படி சொல்லி அனுப்பிவிட்டாராம்.

அப்போது அந்த உதவி இயக்குநரின் நண்பர், “சார், நான் ஒரு கதையைச் சொல்லவா?” என்று கேட்க, கே டி குஞ்சுமோனும் தலையசைத்தாராம். இந்த உதவி இயக்குநர் சொன்ன கதை கே டி குஞ்சுமோனுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். உடனே அவர் இதையே படமாக்கலாம் என்று சொன்னதாகவும், அப்போது அந்த உதவி இயக்குநர், “சார், இது என் நண்பன் சொன்ன அதே கதைதான். ஆனால், நான் சற்று தெளிவாக, விளக்கமாக சொன்னேன்” என்று கூற, கே டி குஞ்சுமோன் முதலில் கதை சொன்ன அந்த உதவி இயக்குநருக்கு வாய்ப்பு அளித்தாராம்.

அந்த உதவி இயக்குநர் ஷங்கர்.

அவர் சொன்ன கதைதான் ஜென்டில்மேன்.

அந்த நண்பர் இயக்குநர் ஏ வெங்கடேஷ் என்று பலரிடம், பலவிதமாக, வேறு வேறு வர்ஷனில் இதே கதையைக் கேட்டிருக்கிறேன். (ஏர்போர்ட்டுக்கு போகும்போது, காரில் கதை சொன்னார், காத்திருக்கும்போது கதை சொல்ல அழைத்தார் என்றெல்லாம் ஏகப்பட்ட வர்ஷன் உண்டு). இதைப்போலவே ஒரு சங்கதி எனக்கும் நடந்தது.

ஒரு காலத்தில் ராயப்பேட்டை பைலட் தியேட்டரில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 7 மணி காட்சிக்கும் எனது நண்பர்கள் குழுவுடன் ஆஜராகி விடுவேன். 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்தப் பழக்கம் 2012 நவம்பர் 1 வரை தொடர்ந்தது. அது என்ன 2012ஆம் ஆண்டு நவம்பர் 1 என்றுதானே கேட்கிறீர்கள்? அன்றுதான் ஜேம்ஸ் பாண்ட் 007னின் ஸ்கைஃபால் படம் தமிழில் ரிலீசானது. ஏற்கனவே தமிழில் டப்பிங் செய்யப்படுகின்ற படங்களில், எனக்கு மொழிமாற்றம் குறித்தான விமர்சனங்கள் நிறையவே இருந்தாலும், அந்தப் படத்தில் மொழிமாற்றம் எங்கள் விமர்சனத்தை மேலும் அதிகப்படுத்தியது (குறிப்பாக எதுவும் நினைவில் இல்லை).

மறுநாளே நண்பர் இரவுக்கழுகுடன் அதே படத்தை சத்யம் தியேட்டரில் பார்த்தோம். ஒரு மாஸ்டர்பீஸை நாம் கிட்டத்தட்ட தவறவிட இருந்தோம் என்பது பிறகுதான் தெரிந்தது. ஆமாம், நேற்று தமிழில் பார்த்த படத்திற்கும், இன்று ஆங்கிலத்தில் பார்த்த ஸ்கைஃபால் படத்திற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். அதாவது தமிழில் நாங்கள் பார்த்தது, ஷங்கர் சொன்னது போல இருந்தது. ஆனால், ஆங்கிலத்தில் பார்த்தது ஏ வெங்கடேஷ் சொன்னது போல இருந்தது. ஸ்கைஃபால் படம் ஏன் இதுவரையில் வந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே ஆகச் சிறந்த படம் என்பது ஆங்கிலத்தில் பார்த்த பிறகுதான் தெளிவாகப் புரிந்தது. அன்று முதல் இனிமேல், டப்பிங் செய்யப்பட்ட படங்களை பார்ப்பதில்லை என்று முடிவெடுத்தேன். அதை இன்று வரையிலும் பின்பற்றி வருகிறேன்.


சரி, எதற்கு இந்த பில்ட் அப் என்கிறீர்களா? சமீபத்தில் ஜேம்ஸ் பாண்டின் லேட்டஸ்ட் படமான ஸ்பெக்ட்ர் ஐ பார்த்தேன். அதைப்பற்றி வேண்டப்பட்ட விரோதி ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அவரது நண்பரொருவர் குறிக்கிட்டு, “பாஸ், தமிழிலும் டப்பிங் அருமையாக இருந்தது” என்றார். அவரிடம் மேலே டைப்பி இருக்கும் அந்த 281 வார்த்தைகளை மறுபடியும் விவரித்தேன். அதற்கு அவர், “இந்த ஒருமுறை எனக்காக பார்த்து விடுங்கள்” என்று சொல்லி, பார்க்கவும் வைத்து விட்டார். என்ன, மொழிமாற்றம் எப்படி இருந்தது என்று கேட்கிறீர்களா? வேண்டாம் சாமி. ஆளை விடுங்கள்.

சரி, இவ்வளவு நேரம் படித்து விட்டதால், ஒரே ஒரு காட்சியை மட்டும் சொல்லி விடுகிறேன். படத்தில் வரும் ஒரு முக்கியமான வசனம் இது.

I Always Knew That Death Would Wear a Familiar Face; But, Not Yours.

இதற்கு என்ன அர்த்தம் என்று நமக்கு தெரியும்தானே? ஆனால், படத்தில், அதாவது மொழிமாற்றம் செய்யப்பட்ட படத்தில், இதே வசனம் எப்படி வருகிறது தெரியுமா?

மரண ரூபத்தில் நீ என்னை தேடி வருவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

மேம்போக்காக பார்க்கும்போது, இது சரியென்றே பட்டாலும், இது தவறான மொழிபெயர்ப்பு ஆகும். ஏனென்றால், இந்த ஸ்பெக்ட்ர் படத்தின் மிகச்சிறந்த அம்சங்களே அதில் உள்ள ட்ரிப்யூட்களும், வசனத்தில் இருக்கும் நுணுக்கமான அர்த்தங்களும்தான். ஆமாம், இந்தப் படத்தின் முதல் பகுதியில் வரும் பெரும்பாலான வசனங்களுக்கு, உளவியல் சார்ந்த, தத்துவ ரீதியிலான பொருள் கொண்ட விளக்கங்கள் உண்டு (குக்கூ?).

ஒரு படைப்பின் அழகியல் என்ன, அதன் உச்சம் என்ன என்பதை உணர்ந்தே அதை மொழிமாற்றம் செய்ய வேண்டும். குருட்டாம்போக்கில், காசுக்கான தோசையாக செய்யப்படும் இதுபோன்ற மொழிமாற்றங்கள், படைப்பின் மீதான மரியாதையை குலைக்கும் காரணிகளாகவே கருதப்படும். இந்த ஸ்பெக்ட்ர் படத்திலும் அதுதான் நடந்து உள்ளது.

ஆங்கில வசனத்தில் இருக்கும் அந்த கவிதைத்தனமான அழகியலைப் பாருங்கள். பின்னர், அதற்கான தமிழ் வசனத்தைப் படியுங்கள், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கே புரியும். புரியவில்லையா? சரி, இதைத்தான் எழுத்தாளர் டாம் ஷுல்மேன் தனது படத்தில் வசனமாகவே சொல்லிவிட்டார். படியுங்கள்.

We don't read and write poetry because it's cute. We read and write poetry because we are members of the human race.       

And the human race is filled with passion.

Medicine, law, business, engineering, these are all noble pursuits, and necessary to sustain life.

But poetry, beauty, romance, love, these are what we stay alive for.

To quote from Whitman: "O me, o life of the questions of these recurring, of the endless trains of the faithless, of cities filled with the foolish.

What good amid these, o me, o life?

Answer: that you are here. That life exists, and identity.       

That the powerful play goes on, and you may contribute a verse.

That the powerful play goes on and you may contribute a verse. 

What will your verse be?

Wednesday 16 April 2014

பார்த்தது Attharintiki Daredi #மொக்கை ஃபில்ம் க்ளப் #சாவுங்கடா 2

 

அத்தாரின்ட்டிகி தாரேதி (அத்தை வீட்டுக்கு வழி என்ன?) – தெலுகு படம் 2013

ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் நடித்து போன ஆண்டு வெளிவந்த படம்தான் அத்தாரின்ட்டிகி தாரேதி. இந்த படம் வெளியாகும் முன்பே அதனுடைய 90 நிமிட காட்சிகள் ஆனலைனில் வெளியாகிவிட, அவசர அவசரமாக இதனை வெள்ளிதிரையில் வெளியிட்டார்கள். படம், சும்மா சொல்லக்கூடாது, பம்பர் ஹிட்.

இந்த படத்தில் பவன் கல்யாண் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். காதல் திருமணம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்த அவருடைய அத்தையை மறுபடியும் தனது தந்தையுடன் சேர்க்க அவர் இந்தியா வருகிறார். அத்தையின் வீட்டில் கார் ட்ரைவராக நடிக்கிறார்.

இதுக்கு மேலே கதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் பற்றி எழுதவில்லை என்றால் ஜென்மசாபல்யம் கிட்டவே கிட்டாது.

படத்தின் க்ளைமேக்சில் பவன் கல்யாண் அத்தை பெண் சமந்தாவுடன் வீட்டை விட்டு ஓடிப்போகிறார். அவர்கள் ஒரு ரெயில் நிலையத்தில் இருக்கும்போது அவருடைய அத்தையும், குடும்பத்தினரும் அதே ரெயில் நிலையத்திற்க்கு வருகிறார்கள். இப்போதுதான் அதகளம் ஆரம்பம்.

பவன் கல்யாண் தன்னுடைய மேனேஜரிடம் “எனக்கு ஐந்து நிமிஷத்தில் இந்த ரெயில்வே ஸ்டேஷன் வேண்டும்” என்று கேட்கிறார். அதற்க்கு அவர் மேனேஜர் “ சார், அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்” என்று சொல்ல, பவன் கல்யாண் பொங்கி எழுகிறார்.

”ஒவ்வொன்றிக்கும் ஒரு விலை இருக்கிறது பாலு! இந்த ஸ்டேஷனுக்கும் ஒரு விலை உண்டு” என்று சொல்ல, “அப்போ பயனிகள் சார்?” என்ற கேள்வி வருகிறது.

”எல்லோரையும் அவங்கவங்க சேர வேண்டிய இடத்துக்கு ஸ்பெஷல் ஃப்ளைட் மூலம் அனுப்பி வைய்யுங்க! ஏர்போர்ட் இல்லாத ஊருக்கு போகிறவர்களை கார் மூலம் அனுப்பி வைய்யுங்க!

மினிஸ்டருக்கு மெஸ்சேஜ் அனுப்புங்க, ஸ்டேஷன் மாஸ்டருக்கு ரெக்வஸ்ட் குடுங்க! அவங்க ஒத்துக்கலைன்னா பயமுறுத்துங்க, அதையும் மீறினா,,,, கொன்னுடுங்க!

எனக்கு இந்த மீட்டிங் ரொம்ப முக்கியம் பாலு! நீ என்ன பண்ணுவியோ தெரியாது! உனக்கு 5 நிமிஷம் டைம் தரேன்!” என்று சொல்லிவிடுகிறார்.

அடுத்து என்ன நடந்தது தெரியுமா? ஹீரோயிசத்தின் உச்சமாக, பவன் கல்யாணின் ஆணைப்படி அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்டேஷனே காலியாகிவிடுகிறது.

அடுத்து என்ன நடந்தது என்பதை இந்த யூடியூப் லின்க்கில் காணவும்!

https://www.youtube.com/watch?v=MW5VAT77VlU

Tuesday 15 April 2014

மொக்கை ஃபில்ம் க்ளப் VeeraBhadhra – Apr 28, 2006 #சாவுங்கடா

பாலைய்யா நடித்து 8 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான இந்த திரைக்காவியத்தில் முக்கியமான ஒரு காட்சியை மன்னிக்கவும், ஒரு திரைக்கவிதையை இப்போது காணப்போகிறீர்கள்.

பாலைய்யாவுக்கும், ஷாயாஜி ஷிண்டேவுக்கும் ஜென்ம பகை. ஷாயாஜி ஷிண்டே ஜெயிலில் இருக்கிறார்.அவரது தங்கை (தனுஸ்ரீ தத்தா) + 3 ரவுடி சகோதரர்கள்.

ஒரு காட்சியில் அந்த 3 அடாவடி சகோதரர்கள் செய்யும் கொடுமையை எதிர்த்து அவர்களை பகைத்துகொள்கிறார் பாலைய்யா.அதனை கண்ட அவர்களது சகோதரிக்கு பாலைய்யா மீது காதல் உண்டாகிவிடுகிறது. பாலைய்யா தன்னுடைய சேரியில் இருக்கும்போது அவரது தங்கை நேரில் வந்து தனது காதலை தெரிவிக்கிறார்.

அப்போது அந்த 3 ரவுடி சகோதரர்கள் தங்களது பென்ஸ் கார் + 35 இதர கார்கள் புடைசூழ பாலைய்யாவின் சேரி பகுதியில் நுழைகின்றனர். தங்கள் தங்கை பாலைய்யாவை விரும்புவதை இவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் ‘பென்ஸ் காரில் வரும் எங்களுக்கு நீ மாப்பிள்ளையா?” என்று கோபம் கொண்டு அவரை திட்டுகிறார்கள்.

அப்போது சினம்கொண்டு எழும் பாலைய்யா, “பெஞ்ச் காரில் வரும் உனக்கு இவ்வளவு திமிரா? அப்படியென்றால் கஞ்சி குடிக்கும் எனக்கு எவ்வளவு திமிர் என்பதை காட்டுகிறேன் பார்” என்று சொல்லி, கண்ணசைக்கிறார். அவ்வளவுதான், அந்த பகுதி மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு அந்த கார்கள் அனைத்தையும் சூரியன் படத்து சரத்குமார் போல கைகளாலேயே தூக்கி அந்தரத்தில் நிறுத்திவிடுகின்றனர்.

அப்போது பாலைய்யா மறுபடியும் “பெஞ்சா? கஞ்சியா?” என்று கேட்டு அவர்களை மன்னிப்பு கேட்க வைக்கிறார்.

பின்குறிப்பு: இங்கே பாலையா பெஞ்ச் என்று உச்சரித்தது பென்ஸ் காரை என்பதை நினைவில் கொள்க.

https://www.facebook.com/KingViswaTCU/posts/10152330009762290?comment_id=29996201&notif_t=like

Sunday 3 November 2013

R.I.P. ரேஷ்மா

"படத்துக்கு போகலாம், வாங்க" என்று வாசலில் இருந்து குரல் கொடுத்தார் அப்பா.

1983ம் ஆண்டு - அப்போதுதான் எங்கள் குடும்பம் ஹைதராபாத் குடிபெயர்ந்தது (என்றே நினைக்கிறேன்). ஒரு விடுமுறை நாளில் (தீபாவளியா அல்லது வேறு ஏதாவது பண்டிகையா என்பது நினைவில்லை) அப்பா சொந்த ஊருக்கு அழைத்து செல்ல முடியாததால் அதற்க்கு பரிகாரமாக எங்கள் குடும்பத்தை சுபாஷ் கை இயக்கத்தில் வெளிவந்த Hero என்ற ஹிந்தி படத்திற்கு அழைத்து செல்வதாக வாக்கு அளித்து இருந்தார்.

ஆனால் நான்கு பேர் கொண்ட எங்கள் குடும்பத்துக்கு (அப்பா, அம்மா, அண்ணா & 3 வயது குழந்தையாக நான்) படம் பார்க்க 8 கிலோ மீட்டர் எப்படி பயணிப்பது என்பதே அன்றைய தலையாய கேள்வி.

அசுவாரஸ்யமாக வெளியே வந்து பார்த்தால், அப்பா புத்தம் புதிய Hero சைக்கிளில் அமர்ந்துக்கொண்டு எங்களைப்பார்த்து சிரித்தார். (அந்த சைக்கிளை 2006 வரை வைத்து இருந்தார்).

இப்படியாக அனைவரும் குடும்பத்துடன் பார்த்த முதல் படம் என்பதாலேயே இந்த Hero படம் செண்டிமெண்டாக மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக அந்த படத்தில் வரும் பாடல்களை எத்தனை முறை கேட்டு இருப்போம் என்பதே கணக்கில் இல்லை. ஆடியோ கேசட் தேய்ந்து போனபிறகு, தனியாக இந்த படத்தின் பாடல்களை ஒரு காலி கேசட்டில் ரெக்கார்ட் செய்து கேட்டுக்கொண்டு இருப்போம் (Betaab மற்றுமொரு படம், அதைப்பற்றி பின்னர் வேறொரு நாளில் அலசுவோம்).

அந்த படத்தில் வரும் இந்த பாடல் அர்த்தம் புரியாத அந்த நாட்களில் பெரிதாக கவரவில்லை என்றாலும் பதின்ம வயதின் முதல் காதலை ரசிக்கும் நாட்களில் இந்த பாடல் வரிகளின் வீரியமும், அடர்த்தியும் முழுமையாக புரிந்தது. அப்போதில் இருந்து இந்த பாடலை குறைந்தது 1000 முறையாவது கேட்டு இருப்பேன் (கண்டிப்பாக மிகைபடுத்தப்பட்ட எண்ணிக்கை அல்ல நண்பர்களே, நிஜம்தான்). அந்த பாடலின் யூ டியூப் லிங்க் மற்றும் அந்த படத்தின் பாடல் வரிகள் (எழுதியது யாரென்று தெரியவில்லை) இங்கே கொடுத்து இருக்கிறேன்

 

 

Bichhde Abhi To Ham Bas Kal Parson
Jioongi Main Kaise, Is Haal Mein Barson
Maut Na Aayi Teri Yaad Kyon Aayi
Hay Lambi Judai
Chaar Dinon Ka Pyaar Ho Rabba
Badi Lambi Judai, Lambi Judai
Ha(n)thon Pe Aaye Meri Jaan Duhai
Hay Lambi Judai
Chaar Dinon Ka Pyaar Ho Rabba
Badi Lambi Judai, Lambi Judai.


Ek To Sajan Mere Paas Nahin Re
Duje Milan Di Koi Aas Nahin Re -2
Uspe Yeh Sawan Aaya -2
Aag Lagaayi, Hay Lambi Judai
Chaar Dinon Ka Pyaar Ho Rabba
Badi Lambi Judai, Lambi Judai

Toote Zamaane Tere Haath Nigode, Haath Nigode
Dil Se Dilon Ke Tune Sheeshe Tode, Sheeshe Tode
Hijr Ki Oonchi, Hijr Ki Oonchi Deevaar Banaayi
Hay Lambi Judai
Chaar Dinon Ka Pyaar Ho Rabba
Badi Lambi Judai, Lambi Judai

Baag Ujad Gaye, Baag Ujad Gaye Khilne Se Pehle
Panchhi Bichhad Gaye Milne Se Pehle -2
Koyal Ki Kook, Koyal Ki Kook Ne Hook Uthaayi
Hay Lambi Judai
Chaar Dinon Ka Pyaar Ho Rabba
Badi Lambi Judai, Lambi Judai
Honthon Pe Aaye Meri Jaan, Duhai
Hay Lambi Judai
Chaar Dinon Ka Pyaar Ho Rabba
Badi Lambi Judai, Lambi Judai.

இந்த பாடலில் வரும் அந்த Floot Piece இன்றைக்கும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு அற்புதமான கம்போசிங். லக்ஷ்மிகாந்த் பியாரே லாலின் இசையில் என்னை இன்றைக்கும் Haunt செய்யும் குரலுக்கு சொந்தக்காரர் ரேஷ்மா என்ற பாடகர். இவர்தான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு இந்த கட்டுரையை எழுத தூண்டியர்.

reshma 2

ராஜஸ்தானில் ஒரு ஜிப்சி குடும்பத்தில் பிறந்து, அதே மாதம் தன்னுடைய குடும்பத்துடன் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் பாகிஸ்தானில் இருக்கும் கராச்சிக்கு குடிபெயர்ந்தார் ரேஷ்மா. சிறுவயதில் பள்ளிக்கு செல்லாமல் வழிபாட்டு தளங்களில் பாடிக்கொண்டு வளர்ந்த ரேஷ்மா, 1959ம் ஆண்டு தன்னுடைய 12வது வயதில் சூஃபி குரு லால் ஷபாஸ் கலந்தர் அவர்களின் நினைவிடத்தில் பாடிக்கொண்டு இருந்ததை அப்போதைய பாகிஸ்தான் ரேடியோ தயாரிப்பாளர் ஒருவர் கேட்டு அசந்துவிட்டார்.

உடனே அவர் ரேஷ்மாவுக்கு பாகிஸ்தான் ரேடியோவில் பாட ஒரு வாய்ப்பு கொடுத்தார். அந்த ரேடியோ தயாரிப்பாளர் யாரென்று தெரியவில்லை. ஆனால் இசையுலகிற்கு அவரது பங்களிப்பு பொன்னெழுத்துக்களால் பதிக்கப்படவேண்டியதொன்று என்பதில் இருவேறு கருத்து இருக்கவே முடியாது. அடுத்த ஆண்டே தொலைக்காட்சியில் பாட ஆரம்பித்த ரேஷ்மாவை பாகிஸ்தான் மட்டுமல்ல, ஆசிய துணைக்கண்டமே கொண்டாட துவங்கியது.

நட்பு ரீதியில் இயங்காத  இரண்டு நாட்டு அதிபர்களை ரசிகர்களாக கொண்ட ஒரே பாடகர் இவராகத்தான் இருக்க முடியும். அதைப்போலவே அனைத்து விஷயங்களிலும் வேறுபட்ட இரண்டு நாட்டு மக்களை இசையால் இணைக்க முடியும் என்று நம்பி அதனை மனதில் கொண்டு பல இந்தியப்படங்களில் பாடினார் ரேஷ்மா.

ராஜ் கபூர் முதல் சுபாஷ் கை வரை, 1970கள் முதல் 2004 வரை தலைமுறைகளை கடந்து, புற்றுநோயை தைரியமாக எதிர்கொண்டு கடைசி காலம் வரை மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்த ரேஷ்மா அவர்களுக்கு என்னுடைய மரியாதை கலந்த வணக்கங்கள்.

ஒரு கலைஞனுக்கு அவனுடைய படைப்பு தலைமுறைகளை கடந்தும் நிலைத்து நிற்பதே உச்சபட்ச மரியாதை. முப்பதாண்டுகள் என்பது ஒரு தனி மனிதனின் வாழ்க்கையிலும் சரி, ஒரு நாட்டின் சரித்திரத்திலும் சரி, மிகவும் நீண்ட கால இடைவெளியே. இந்த இடைவெளியை சர்வசாதாரணமாக கடந்த ரேஷ்மா அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார்.

ஜிப்சிக்களின் நம்பிக்கைப்படி இந்த உலகில் அனைத்துமே பயணம்தான். அதில் ஒரு சிலரின் பயணம் மட்டுமே பேசப்படுகிறது. ரேஷ்மா இன்னும் முப்பதாண்டுகள் கழித்தும் பேசப்படுவார்.

பின் குறிப்பு: ஹீரோ படம் பல மொழிகளில் பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியது. ஹிந்தியில் ஜாக்கி ஷெராஃப், தெலுங்கில் நம்ம நாகார்ஜுனா, கன்னடத்தில் ரவிச்சந்திரன் என்று ஒரு தனி லிஸ்ட்டே இருக்கிறது. இவ்வளவு ஏன்? அடுத்த ஆண்டு ஆதித்ய பன்சோலியின் மகனை ஹீரோவாக கொண்டு ரீமேக் செய்யப்படுகின்றது.

Saturday 26 January 2013

கேட்டது 001: டிமிட்ரி டியோம்கின் இசை Dimitri Tiomkin (1894-1979)

சொந்தக்கதை:  பதிவுக்கு தேவை இல்லாதது. தயவு தாட்சண்யம் இல்லாமல் ஸ்கிப் செய்துவிடலாம். அதையும் மீறி படிப்பவர்களுக்கு ஏற்படும் கால விரயத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல

சென்ற வாரம் நண்பர் ஒருவருடன் பழைய ஆங்கில திரைப்படங்களில் இசை பற்றி நீண்ட நேரம் விவாதித்துக்கொண்டு இருந்தேன். அப்போது விவாதப்பொருள் தற்செயலாக எங்கள் இருவருக்குமே பிடித்த "ஜானர்" ஆகிய வெஸ்டர்ன் திரைப்படங்களைப்பற்றி திரும்பியது. அப்போதுதான் வெகுஜன ரசிகனின் இசையமைப்பாளர் என்னியொ மோரிக்கொன் அவர்களின் இசையை பற்றி பேசினோம்.

அப்போது நண்பர் (என்னைப்பற்றி நன்கு அறிந்தவர்) உடனடியாக மாணவனைப்பற்றி பேசாமல் ஆசிரியரைப்பற்றி பேசுவோமா? என்று ஒரு இசைத்தட்டை தந்தார். அது நான் பல வருடங்களாக தேடி வந்த ஒரு சீடி. டிமிட்ரி டியோம்கின் என்கிற இசைமேதையின் சிறந்த பாடல்களையும், முன்னணி இசையையும் கொண்ட சீடி அது. நண்பருக்கு உடனடியாக நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து கடந்த மூன்று நாட்களாக அந்த இசையையே கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 

வீட்டில் இருப்பவர்களுக்கு சிறிது ஆச்சர்யமே. ஏனென்றால் பொதுவாக நான் படங்களில் இசையை சிலாகித்தாலும், தனியாக இசையை ஆடியோ வடிவில் கேட்பதை நிறுத்தி சுமார் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றது. அப்படி இருக்க இந்த சீடியை தொடர்ந்து கேட்பது ஒரு ஆச்சர்யமான விஷயமல்லவா?

Dimitri Tiomkin

டிமிட்ரி டியோம்கின் - ஒரு சின்ன முன் கதை சுருக்கம் 

Do Not Forsake Oh My Darling Musical Notes நம்ம ஊரு ஆளுங்களுக்கு எல்லாம் வெஸ்டர்ன் படம் என்றால் அது ஒன்று மெக்கன்னாஸ் கோல்ட் அல்லது கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த குட்,பேட் & அக்ளி, டாலர் ட்ரிலஜி படங்கள் மட்டுமே உடனடியாக தெரிய வரும். அதில் தவறும் இல்லை. இந்த டாலர் ட்ரிலஜி படங்களின் இயக்குனர் செர்ஜியோ லியோனி.

A FISTFUL OF DOLLARS படத்திற்கு இசையமைத்துக்கொண்டு இருக்கும்போது இயக்குனர் செர்ஜியோ லியோனி இசையமைப்பாளர் என்னியொ மோரிக்கொன் இடம் "எனக்கு இந்த படத்தின் தீம் ம்யூசிக் எப்படி வேண்டுமென்றால் நம்ம டிமிட்ரி டியோம்கின் இசையை போல வேண்டும்" என்று Particular ஆக கேட்டு அதைப்போலவே இசையையும் அமைத்துக்கொண்டார். அந்த தீம் ம்யூசிக்'ஐ தான் 2008இல் சன் ம்யூசிக், இசையருவி போன்ற  ம்யூசிக் சேனல்கள் தங்களுடைய சேனல் ப்ரோமோ தீம் ம்யூசிக் ஆக வைத்துக்கொண்டு இருந்தது தனி கதை. இப்படி உலகமே தெரிந்த ஒரு இயக்குனர் புகழ் பெற்ற ஒரு இசையமைப்பாளரிடம் "தழுவி" இசையமைக்க சொல்லி இருக்கிறார் என்றால் அந்த ஒரிஜினல் இசையமைப்பாளர் எப்படிப்பட்ட ஆளுமையாக இருக்க வேண்டும்? அவர்தான் இந்த கட்டுரையின் நாயகன் டிமிட்ரி டியோம்கின்.

ஹை நூன் - டு நாட் ஃபோர்சேக் மீ, ஓ மை டார்லிங்: பரிணாம வளர்ச்சியில் அந்தந்த இடைப்பட்ட காலகட்டங்களில் ஒருவர் அந்த தலைமுறையின் வளர்ச்சியை நிர்ணயிப்பவராக அமைந்து விடுவார். ஆங்கில திரைப்பட இசைக்கு அப்படி ஒரு தலைமுறையின் திசையை மாற்றி அமைப்பவராக வந்தவரே டியோம்கின். இவரைப்பற்றி இன்னமும் அதிகமாக சொல்லும் முன்னர் இந்த டைட்டில் சாங்'ஐ ஒரு முறை கேட்டு விடுங்கள். ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படபாடல் இது என்பது போனஸ் தகவல்.

 

பழைய பாடல் கேசட்டுகளில் ஒரு படத்தின் முக்கியமான பாட்டிற்கு இரண்டு வெர்ஷன்கள் இருக்குமாறு அமைத்திருப்பார்கள். குறிப்பாக ஒரே பாடலை ஹீரோவும் (ஆண் குரல்) ஹீரோயினும் (பெண் குரலில்) பாடியிருப்பாதகவே இது அமையும். எப்போதாவது ஒரே பாடலை சந்தோஷமான ரெண்டரிங், சோக பாடல் என்றும் இரண்டு விதமாக அமைத்திருப்பார்கள். 

சில சமயங்களில் ஒருபடப்பாடல் ஹிட் ஆகிவிட்டால் அதனையே வேறு சிலரைக்கொண்டு பட வைத்து தனி ஆல்பம் ஆகவும் வெளியிடுவார்கள். என்ன, இரண்டு மூன்று புகழ் பெற்ற பாடஹர்கள், அல்லது பிரபலங்கள் பாடியதாகவே அந்த வகை ஆல்பங்கள் இருக்கும். ஆனால் எப்போதாவது ஒரு ஹிட் ஆன பாடலை 25 பேரைக்கொண்டு பாட வைத்து ஆல்பம் வெளியிட்டதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஆமாம், இந்த Do Not Forsake Me O My Darling என்கிற பாடலை 25 பேரை தனியாக பாட வைத்து ஆல்பம்  வெளியிட்டு இருக்கிறார்கள் என்றால் இந்த பாடல் எந்த அளவுக்கு ஹிட் ஆகியிருக்க வேண்டும் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

ரியோ பிராவோ - மை ரைஃபில், மை போனி & மீ: மேலே இருக்கும் பாடல் இடம் பெற்ற ஹை நூன் படத்திற்கும் இந்த ரியோ பிராவோ படத்திற்கும் மிகவும் நெருங்கிய பந்தம் உண்டு (அதனை பற்றி தனியாக, விரிவாகவே சொல்ல வேண்டி இருக்கும், இந்த பதிவின் இடைசெறுகலாக அல்ல). இந்த ரியோ பிராவோ படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் பாடகர்கள் என்பதால் இந்த படத்தின் இடையிலேயே ஒரு அட்டகாசமான ஃப்ரெண்ட்ஷிப் பாடல் ஒன்று இடம்பெற்று இருக்குமாறு இயக்குனர் ஹோவர்ட் ஹாக்ஸ் பார்த்துக்கொண்டார். இந்த படத்தில் வரும் எல் டிகேலோ பாடலின் இசையும் நெஞ்சை பிசையுமாறு இருக்கும். 

 

கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டு இருக்கும்போது யாராவது நமது அருகில் அமர்ந்துக்கொண்டு இந்த  ஷாட்டில் ஃபுட் வொர்க் இப்படி இருந்திருக்க வேண்டும், எல்போ இப்படி இருந்திருந்தால்தான் அது சரி, என்று சொல்லிக்கொண்டு இருந்தால் நம்மால் எப்படி ஆட்டத்தை ரசிக்க முடியாதோ,அதைப்போலவே தான் இசையும். 

 

இசையின் மேன்மையை ரசிக்க தேவை ரசனையும் தேடல் குறித்த பசியுமே தவிர இசை குறித்த சூட்சுமங்கள் அல்ல. ஆகையால் இந்த பதிவிலும்,இதனை தொடரும் மற்ற இசை குறித்தான பதிவுகளிலும் நீங்கள் இசையை குறித்த ரசனை தொடர்பான விஷயங்களையே இங்கே எதிர்ப்பார்க்க வேண்டியிருக்கும். காட்டில் இருக்கும் மரங்களை என்ன ஆரம்பித்தால் கானக அழகை ரசிக்க இயலாது என்று சொல்வார்களே, அதைப்போல இசையின் நெளிவு சுளிவுகளை பேச ஆரம்பித்தால் இசையை மறக்கவேண்டி இருக்கும்.

டிமிட்ரி டியோம்கின் அவர்களின் இசைக்கு சாம்பிள் ஆக அடுத்து மூன்று வீடியோ இணைப்புகளை கொடுத்திருக்கிறேன். இந்த வகையான பதிவுகளில் சில பின் குறிப்புகளும் இது போன்ற வீடியோ இணைப்புகளுமே இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

ரஹ்மான் ராஜாசார் ரசிகர்களோ மற்றவர்களுக்கோ இந்த மாதிரியான இசை ரசனை சற்றே அலுப்பூட்டுவதாக இருக்கக்கூடும். ஆனால் இப்போதைய தார் சாலைகளுக்கு முதலில் மன்பாதையை அமைத்தவர்களை வரலாறு மறந்தாலும் பாதையில் நடப்பவர்கள் மறக்ககூடாதல்லவா?

படித்தது 001: திரும்பி பார்க்கிறேன்: டைரக்டர் ஸ்ரீதர்-சந்திரமௌலி-அருந்ததி நிலையம்

நெடுநாட்களாகவே ஆன்லைன் ரீடிங் லைப்ரரி அக்கவுண்ட் ஒன்றினை துவக்க எண்ணி,இந்த  ஆண்டுதான் அதற்க்கான முயற்சியில் இறங்கினேன். ஆனால் இப்போதைக்கு இந்த ப்ளாக் மட்டுமே பிள்ளையார் சுழி. இதனையாவது ஒரு மூன்று மாதம் ஒழுங்காக மெயின்டெயின் செய்கிறேனா  பார்த்துவிட்டு மற்றது அப்புறம்.

சொந்தக்கதை:  பதிவுக்கு தேவை இல்லாதது. தயவு தாட்சண்யம் இல்லாமல் ஸ்கிப் செய்துவிடலாம். அதையும் மீறி படிப்பவர்களுக்கு ஏற்படும் கால விரயத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல 

சினிமா,ஸ்போர்ட்ஸ்,பிக்ஷன் மற்றும் நான்-பிக்ஷன் வகையறாக்களில் இந்த ஆண்டு கொஞ்சம் அடித்து ஆடலாம் என்று இருக்கிறேன். ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் கடந்த பதினான்கு ஆண்டுகளாகவே என்னுடையை Thinking Process எல்லாமே ஆங்கிலத்திலேயே நடப்பதால் தமிழில் (மறுபடியும்) படிப்பது சற்றே சிரமமாக உள்ளது. இங்கே கண்டிப்பாக அந்த தடுமாற்றதினை காணலாம். 

கண்டிப்பாக சுய முன்னேற்ற நூல்களும்,குறிப்புதவி நூல்களும் இங்கே பதிவேறா. சூடோ (Pseudo) இலக்கியவாதிகள் (இலக்கிய வியாதிகள்?), அறிவுஜீவிகளையும் கண்டாலே எனக்கு அலர்ஜி என்பதால் அவர்கள் இங்கே தவிர்க்கப்படுவார்கள். 

இவ்விடத்தில் ஜெயமோகனும் வருகை தருவார், சி மோகனும் இருப்பார். MD வாசுதேவன் நாயரும் பேயோனுக்கும் இங்கே வித்தியாசங்கள் இல்லை. சாரு நிவேதிதாவும் சரோஜாதேவியும், எஸ்.ராமகிருஷ்ணனும் ராஜேஷ்குமாரும் மதிப்பிடப்படுவது அவர்களின் Content ஐ வைத்தே தவிர அவர்களின் பெயர்களை கொண்டு அல்ல. 

இதற்க்கு மேலே நீட்ட முழக்கி போவது சுய தம்பட்டம் அடிப்பது போலிருக்கும் என்பதால் இந்த ஆரம்ப குறிப்பிற்கு இத்துடன் மங்களம் பாடப்படுகிறது. Welcome to My World, Folks.

இயக்குனர் ஸ்ரீதர் - திரும்பி பார்க்கிறேன் – சந்திரமௌலி: இந்த ஆண்டின் முதல் புத்தகமாக ஏதாவது ஒரு காமிக்ஸ் புத்தகதினையே படிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் நண்பர் ஒருவரின் பேச்சில் மயங்கி இந்த புத்தகத்தை அவரிடம் இரவல் பெற்று இரண்டு மணி நேரங்களிலேயே படித்து முடித்து விட்டேன். 360 பக்கங்கள் இரண்டு மணி நேரத்திலா? என்று ஆச்சரியப்படாமல் இருந்தால் இந்த மாதிரி வாசிப்பிற்கு நம்முடைய Sub-Conscious Mindன் துணை தேவைப்படுவது இல்லையென்பதும், இவை எல்லாமே சுவையான சினிமா சம்பவங்கள் என்பதால் சிந்திக்க அவகாசமோ, தேவையோ இல்லை என்பதும் தெளிவாகும். அதே சமயம் ஒரு விதமான Soft Reading என்பதால் சதாப்தி எக்ஸ்பிரெஸ் போல விரைவில் படித்து விட முடிந்தது.

Dir Sridhar Thirumbi Paarkkiren Arundhathi Nilaiyam 2002  1st Page

உண்மையை சொல்வதெனின், இந்த புத்தகத்தினை படிக்க ஆரம்பிக்கும் முன் இயக்குனர் ஸ்ரீதர் பற்றி ஏதேனும் நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக என்று வினா எழுப்பி இருந்தால் வெகு சுலபமாக நான் இந்த பரிட்சையிலும் ஃபெயில் ஆகி இருப்பேன். என்னுடைய தமிழ் சினிமா குறித்தான வரலாறு,புவியியல் மற்றும் குடிமையியல் அந்த அளவுக்கு மகத்தானது. "விஸ்வநாதன், வேலை வேண்டும்" என்ற பாடல் இடம் பெற்ற ஒரு செம ஜாலியான திரைப்படத்தினை இயக்கியவர் இவர் என்பதும் தெரியும். அதற்கு மேலே, ஹும்ம்ம்ம் அவ்வளவுதான் (சொல்லப் போனால் அந்தப் படத்தின் பெயர் கூட இந்த புத்தகத்தினை படிக்கும்போது எனக்கு தெரியாது என்பதே நிதர்சனம்).

In  Fact, அந்த படத்தினையும் கூட நான் முதலில் பார்த்தது ஹிந்தியில் தான். அதுவும் டில்லியில் (என்று என்னுடைய மூளை நினைவு படுத்துகிறது). ஆகவே ஹிந்தி மொழியில் வந்தது முதல் (ஒரிஜினல்) படமா அல்லது தமிழில் வந்தது மூலப்படமா? என்பதும் கூட சந்தேகமாகவே இருந்த சூழலிலேயே இந்த புத்தகத்தினை படிக்க ஆரம்பித்தேன்.

 திரும்பி பார்க்கிறேன் By சந்திரமௌலி: இந்த புத்தகத்தின் ஆசிரியரைப்பற்றி குறிப்பு இந்த பதிவின் பின்னேயும், இந்த புத்தகத்தின் பின் அட்டையிலும் ஏற்கனவே சொல்லப்படவேண்டிய அளவிற்கு எழுதப்பட்டு விட்டதால் நேரிடையாக புத்தகத்தை பற்றிய விமர்சனத்திற்கு சென்று விடுவோம்.

கல்கி வார இதழின் பொன்விழா ஆண்டுமலருக்காக தொடங்கிய ஒரு பேட்டியே இந்த புத்தகத்தின் நதிமூலம் ரிஷிமூலம். இந்த புத்தக ஆசிரியரும் பிரபல பத்திரிக்கையாளருமாகிய சந்திரமௌலி இயக்குனர் ஸ்ரீதர் அவர்களை நேரில் சந்தித்து அவரிடம் கேட்டுப் பெற்ற செய்திகளை இங்கே (முடிந்த அளவுக்கு) கோர்வையாக சொல்ல முயன்று இருக்கிறார்.

Dir Sridhar Thirumbi Paarkkiren Arundhathi Nilaiyam 2002 Info About Artist Maya Page No 11

தமிழில் முழுமையான (ஆதாரம் சார்ந்த) சினிமா புத்தகங்கள் மிகவும் குறைவு. அப்படியே இருந்தாலும் அவை ஒரு பார்வையில் தங்களின் கோப-தாபங்களை நிவர்த்தி செய்துக்கொள்ளவே எழுதப்படுகின்றன (சமீபத்திய உதாரணம் கமல் ஹாசன்-முக்தா சீனிவாசன்). ஆனால் இந்த புத்தகத்தில் முடிந்த அளவுக்கு மிகவும் நேர்மையான தகவல்களை அளித்து இருப்பது சிறப்பு. அந்த வகையில் இந்த புத்தகம் தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கும், தகவல் தேடி'களுக்கும் ஒரு முக்கியமான புத்தகமாக அமைந்து விடுகிறது.

முதல் அத்தியாயத்தை படிக்கும்போது (வாண்டுமாமா - கௌசிகன் போல) குடும்ப புராணமாக இருந்து விடுமோ என்று யோசிக்கும்போதே சின்ன வயது நாயகன் சைக்கிள் ஓட்டிக்கொண்டே பெரியவன் ஆவது போல அடுத்த பக்கங்களிலேயே கல்லூரி கால சம்பவங்களுக்கு நம்மையெல்லாம் கொண்டுவந்து விடுகிறார். எங்கே எடிட் செய்யவேண்டும், எங்கே Fast Forward செய்யவேண்டும் என்பது நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்.அந்த வகையில் ஒரு தேர்ந்த இயக்குனரின் கைவண்ணம் புலப்படுகிறது.

பழைய கல்கி வாசகர்கள் யாராவது இந்த கேள்விக்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும்: கல்கி வார இதழில் எங்கே எல்லாம் தொடரும் என்று முடித்து இருந்தார்கள்? என்பதே அந்த கேள்வி. ஒரு தொடர் கதை எழுத்தாளருக்கே உரிய விறுவிறுப்பு பல இடங்களில் கண்கூடாக தெரிகின்றது. ஒரு வேகமான ஓட்டத்தின் ஊடே  படிப்பவர்களை அதே வேகத்தில் தன்னுடன்  தக்கவைத்துக்கொள்ளும் வித்தை இந்த எழுத்தாளருக்கு இந்த புத்தகத்தில் வாய்த்திருக்கிறது. Hats off to you, Mr சந்திரமௌலி. அதற்க்கு எழுத்து நடை மட்டும்தான் காரணமா அல்லது சம்பவங்களின் சுவையா என்று வினவினால் இரண்டும் கலந்ததினால் என்று சாலமன் பாப்பைய்யா போல சொல்லிவிடுவது நன்று

Dir Sridhar Thirumbi Paarkkiren Arundhathi Nilaiyam 2002 Info About MGRs Raja Thanthiram Page No 250 251

புத்தகத்தின் -கள்:

#என்னதான் முயன்று இருந்தாலும் ஒரு நேர் வரிசையில் சம்பவங்கள் இல்லாமை

#அடுத்தடுத்த சம்பவங்களுக்கிடையில் ஃப்ளாஷ்-பேக் மூலம் வேறொரு சங்கதியை  கொண்டுவருதல்

#புத்தகத்தில் இன்டெக்ஸ் இல்லாதது (அட் லீஸ்ட் படங்களின் Chronological வரிசையையாவது போட்டிருக்கலாம்

#பல விஷயங்களை ஆர்வத்துடன் துவக்கி விட்டு சடாரென முடித்துவிட்டது

#சுவையான, சுவாரஸ்யமான விஷயங்களை பகிரும்போது அவை சார்ந்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கலாம்.

#ஒவ்வொரு திரைப்படத்தினை பற்றியும் விளக்கமாக சொல்லும்போது அந்த பட விவரங்களை வெளியிட்டு இருக்கலாம் (இசை,எடிட்டிங்,நடிகர்கள்,தயாரிப்பாளர்)

புத்தகத்தின் +கள்:

#ஹேமாமாலினி இயக்குனர் ஸ்ரீதரால் முதலில் நிராகரிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். அதற்க்கு பிறகு நடந்தது எத்துனை பேருக்கு தெரியும்? ஹேமாமாலினியை ஸ்ரீதர் மறுபடியும் நடிக்க வைக்க முயற்ச்சித்து நடக்காமல் போவது தனிகதை. சுவாரஸ்யமோ சுவாரஸ்யம்.

#சூரஜ் பர்ஜாத்யா அவர்களின் வியாபார யுத்தி, ராஜ் கபூரின் நட்பு, எம்ஜியாருடன் இருந்த பந்தம் என்று பல சுவையான விஷயங்கள்.

#முதலில் நாடக குழுவுக்கு கதை எழுதி கொடுக்கும்போது இவர் மீது சந்தேகம் கொண்டு மாடியில் இவரை இரவு தங்க சொன்னது, சேலம் பட விநியோகச்தரின் கம்பெனியில் வேலை செய்தபோது நேர்மைக்கு கிடைத்த பரிசு, நட்பு காரணமாக கண்ணை மூடிக்கொண்டு கடன் கொடுத்தது, பின்னர் அதே நபருக்கு தேவை இருந்தாலும் மறுத்தது  என்று ஸ்ரீதரை பற்றி பல தகவல்கள்.

My Verdict:மொத்தத்தில் ஒரு ஜாலியான டைம் பாஸ் மழைக்கால மாலை நேரத்து தேனீருடன் சுவையான அசை போடும் நினைவுகளுக்கு சொந்தக்காரன். நாஸ்டால்ஜியா பிரியர்களுக்கு கண்டிப்பாக இந்த புத்தகம் ஒரு Must Buy.

Dir Sridhar Thirumbi Paarkkiren Arundhathi Nilaiyam 2002 Cover
Dir Sridhar Thirumbi Paarkkiren Arundhathi Nilaiyam 2002 Credits
Dir Sridhar Thirumbi Paarkkiren Arundhathi Nilaiyam 2002 Writers Page