Saturday, 26 January 2013

கேட்டது 001: டிமிட்ரி டியோம்கின் இசை Dimitri Tiomkin (1894-1979)

சொந்தக்கதை:  பதிவுக்கு தேவை இல்லாதது. தயவு தாட்சண்யம் இல்லாமல் ஸ்கிப் செய்துவிடலாம். அதையும் மீறி படிப்பவர்களுக்கு ஏற்படும் கால விரயத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல

சென்ற வாரம் நண்பர் ஒருவருடன் பழைய ஆங்கில திரைப்படங்களில் இசை பற்றி நீண்ட நேரம் விவாதித்துக்கொண்டு இருந்தேன். அப்போது விவாதப்பொருள் தற்செயலாக எங்கள் இருவருக்குமே பிடித்த "ஜானர்" ஆகிய வெஸ்டர்ன் திரைப்படங்களைப்பற்றி திரும்பியது. அப்போதுதான் வெகுஜன ரசிகனின் இசையமைப்பாளர் என்னியொ மோரிக்கொன் அவர்களின் இசையை பற்றி பேசினோம்.

அப்போது நண்பர் (என்னைப்பற்றி நன்கு அறிந்தவர்) உடனடியாக மாணவனைப்பற்றி பேசாமல் ஆசிரியரைப்பற்றி பேசுவோமா? என்று ஒரு இசைத்தட்டை தந்தார். அது நான் பல வருடங்களாக தேடி வந்த ஒரு சீடி. டிமிட்ரி டியோம்கின் என்கிற இசைமேதையின் சிறந்த பாடல்களையும், முன்னணி இசையையும் கொண்ட சீடி அது. நண்பருக்கு உடனடியாக நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து கடந்த மூன்று நாட்களாக அந்த இசையையே கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 

வீட்டில் இருப்பவர்களுக்கு சிறிது ஆச்சர்யமே. ஏனென்றால் பொதுவாக நான் படங்களில் இசையை சிலாகித்தாலும், தனியாக இசையை ஆடியோ வடிவில் கேட்பதை நிறுத்தி சுமார் பதினைந்து ஆண்டுகள் ஆகின்றது. அப்படி இருக்க இந்த சீடியை தொடர்ந்து கேட்பது ஒரு ஆச்சர்யமான விஷயமல்லவா?

Dimitri Tiomkin

டிமிட்ரி டியோம்கின் - ஒரு சின்ன முன் கதை சுருக்கம் 

Do Not Forsake Oh My Darling Musical Notes நம்ம ஊரு ஆளுங்களுக்கு எல்லாம் வெஸ்டர்ன் படம் என்றால் அது ஒன்று மெக்கன்னாஸ் கோல்ட் அல்லது கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த குட்,பேட் & அக்ளி, டாலர் ட்ரிலஜி படங்கள் மட்டுமே உடனடியாக தெரிய வரும். அதில் தவறும் இல்லை. இந்த டாலர் ட்ரிலஜி படங்களின் இயக்குனர் செர்ஜியோ லியோனி.

A FISTFUL OF DOLLARS படத்திற்கு இசையமைத்துக்கொண்டு இருக்கும்போது இயக்குனர் செர்ஜியோ லியோனி இசையமைப்பாளர் என்னியொ மோரிக்கொன் இடம் "எனக்கு இந்த படத்தின் தீம் ம்யூசிக் எப்படி வேண்டுமென்றால் நம்ம டிமிட்ரி டியோம்கின் இசையை போல வேண்டும்" என்று Particular ஆக கேட்டு அதைப்போலவே இசையையும் அமைத்துக்கொண்டார். அந்த தீம் ம்யூசிக்'ஐ தான் 2008இல் சன் ம்யூசிக், இசையருவி போன்ற  ம்யூசிக் சேனல்கள் தங்களுடைய சேனல் ப்ரோமோ தீம் ம்யூசிக் ஆக வைத்துக்கொண்டு இருந்தது தனி கதை. இப்படி உலகமே தெரிந்த ஒரு இயக்குனர் புகழ் பெற்ற ஒரு இசையமைப்பாளரிடம் "தழுவி" இசையமைக்க சொல்லி இருக்கிறார் என்றால் அந்த ஒரிஜினல் இசையமைப்பாளர் எப்படிப்பட்ட ஆளுமையாக இருக்க வேண்டும்? அவர்தான் இந்த கட்டுரையின் நாயகன் டிமிட்ரி டியோம்கின்.

ஹை நூன் - டு நாட் ஃபோர்சேக் மீ, ஓ மை டார்லிங்: பரிணாம வளர்ச்சியில் அந்தந்த இடைப்பட்ட காலகட்டங்களில் ஒருவர் அந்த தலைமுறையின் வளர்ச்சியை நிர்ணயிப்பவராக அமைந்து விடுவார். ஆங்கில திரைப்பட இசைக்கு அப்படி ஒரு தலைமுறையின் திசையை மாற்றி அமைப்பவராக வந்தவரே டியோம்கின். இவரைப்பற்றி இன்னமும் அதிகமாக சொல்லும் முன்னர் இந்த டைட்டில் சாங்'ஐ ஒரு முறை கேட்டு விடுங்கள். ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படபாடல் இது என்பது போனஸ் தகவல்.

 

பழைய பாடல் கேசட்டுகளில் ஒரு படத்தின் முக்கியமான பாட்டிற்கு இரண்டு வெர்ஷன்கள் இருக்குமாறு அமைத்திருப்பார்கள். குறிப்பாக ஒரே பாடலை ஹீரோவும் (ஆண் குரல்) ஹீரோயினும் (பெண் குரலில்) பாடியிருப்பாதகவே இது அமையும். எப்போதாவது ஒரே பாடலை சந்தோஷமான ரெண்டரிங், சோக பாடல் என்றும் இரண்டு விதமாக அமைத்திருப்பார்கள். 

சில சமயங்களில் ஒருபடப்பாடல் ஹிட் ஆகிவிட்டால் அதனையே வேறு சிலரைக்கொண்டு பட வைத்து தனி ஆல்பம் ஆகவும் வெளியிடுவார்கள். என்ன, இரண்டு மூன்று புகழ் பெற்ற பாடஹர்கள், அல்லது பிரபலங்கள் பாடியதாகவே அந்த வகை ஆல்பங்கள் இருக்கும். ஆனால் எப்போதாவது ஒரு ஹிட் ஆன பாடலை 25 பேரைக்கொண்டு பாட வைத்து ஆல்பம் வெளியிட்டதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஆமாம், இந்த Do Not Forsake Me O My Darling என்கிற பாடலை 25 பேரை தனியாக பாட வைத்து ஆல்பம்  வெளியிட்டு இருக்கிறார்கள் என்றால் இந்த பாடல் எந்த அளவுக்கு ஹிட் ஆகியிருக்க வேண்டும் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

ரியோ பிராவோ - மை ரைஃபில், மை போனி & மீ: மேலே இருக்கும் பாடல் இடம் பெற்ற ஹை நூன் படத்திற்கும் இந்த ரியோ பிராவோ படத்திற்கும் மிகவும் நெருங்கிய பந்தம் உண்டு (அதனை பற்றி தனியாக, விரிவாகவே சொல்ல வேண்டி இருக்கும், இந்த பதிவின் இடைசெறுகலாக அல்ல). இந்த ரியோ பிராவோ படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர்கள் பாடகர்கள் என்பதால் இந்த படத்தின் இடையிலேயே ஒரு அட்டகாசமான ஃப்ரெண்ட்ஷிப் பாடல் ஒன்று இடம்பெற்று இருக்குமாறு இயக்குனர் ஹோவர்ட் ஹாக்ஸ் பார்த்துக்கொண்டார். இந்த படத்தில் வரும் எல் டிகேலோ பாடலின் இசையும் நெஞ்சை பிசையுமாறு இருக்கும். 

 

கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டு இருக்கும்போது யாராவது நமது அருகில் அமர்ந்துக்கொண்டு இந்த  ஷாட்டில் ஃபுட் வொர்க் இப்படி இருந்திருக்க வேண்டும், எல்போ இப்படி இருந்திருந்தால்தான் அது சரி, என்று சொல்லிக்கொண்டு இருந்தால் நம்மால் எப்படி ஆட்டத்தை ரசிக்க முடியாதோ,அதைப்போலவே தான் இசையும். 

 

இசையின் மேன்மையை ரசிக்க தேவை ரசனையும் தேடல் குறித்த பசியுமே தவிர இசை குறித்த சூட்சுமங்கள் அல்ல. ஆகையால் இந்த பதிவிலும்,இதனை தொடரும் மற்ற இசை குறித்தான பதிவுகளிலும் நீங்கள் இசையை குறித்த ரசனை தொடர்பான விஷயங்களையே இங்கே எதிர்ப்பார்க்க வேண்டியிருக்கும். காட்டில் இருக்கும் மரங்களை என்ன ஆரம்பித்தால் கானக அழகை ரசிக்க இயலாது என்று சொல்வார்களே, அதைப்போல இசையின் நெளிவு சுளிவுகளை பேச ஆரம்பித்தால் இசையை மறக்கவேண்டி இருக்கும்.

டிமிட்ரி டியோம்கின் அவர்களின் இசைக்கு சாம்பிள் ஆக அடுத்து மூன்று வீடியோ இணைப்புகளை கொடுத்திருக்கிறேன். இந்த வகையான பதிவுகளில் சில பின் குறிப்புகளும் இது போன்ற வீடியோ இணைப்புகளுமே இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

ரஹ்மான் ராஜாசார் ரசிகர்களோ மற்றவர்களுக்கோ இந்த மாதிரியான இசை ரசனை சற்றே அலுப்பூட்டுவதாக இருக்கக்கூடும். ஆனால் இப்போதைய தார் சாலைகளுக்கு முதலில் மன்பாதையை அமைத்தவர்களை வரலாறு மறந்தாலும் பாதையில் நடப்பவர்கள் மறக்ககூடாதல்லவா?

No comments:

Post a Comment